Na.Muthusamy
ந.முத்துசாமி (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018) தமிழ் எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000-ஆம் ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது "கூத்துப்பட்டறை" என்ற நாடக அமைப்பு, தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.